Saturday 23 July 2016

குரு பெயர்ச்சி 2016: திருச்செந்தூர் முருகனும்... குரு பகவானும்!

தூத்துக்குடி: குரு பகவானின் அருள் பார்வை கிடைக்க முருகன் கோயிலுக்கு சென்று வணங்கலாம். திருச்செந்தூர் குரு ஸ்தலமாகும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யலாம்.
நவகிரகங்களில் பிரஹஸ்பதி என்ற வியாழபகவான் மிகவும் பிரசித்திபெற்றவர். பிரகஸ்பதியை தேவர்கள் குருவாக ஏற்றனர்.
வியாழ பகவானான குரு திருச்செந்தூர் தலத்தில் வழிபட்டு தன் யந்திரத்தை ஸ்தாபித்துள்ளார். திருச்செந்தூர் தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.
இத்தலத்தில் 17ம் நூற்றாண்டில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. டச்சு நாட்டு கடற்கொள்ளையர்கள் இக்கோவிலைக் கொள்ளையடித்தார்கள். அதுசமயம் தெற்குநோக்கி இருந்த ஆறுமுகப் பெருமானையும், விக்ரகங்களையும் தூக்கிக்கொண்டு கப்பலில் ஏறினர்.
அடுத்த சில மணிகளில் பெரும்புயலும், இடியும் மழையும் அவர்களைத் தாக்கின. அவர்கள் பயந்து முருகனின் திருவுருவச் சிலையையும், விக்ரகங்களையும் கடலில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். காலையில் ஆலயம் வந்த பக்தர்கள் ஆண்டவனைக் காணாமல் துயரம் கொண்டனர்.
அந்த சமயம் ஒரு அற்புதம் நடந்தது. வடமலையப்ப பிள்ளை என்ற அடியவரின் கனவில் முருகன் தோன்றி தான் இருக்கும் இடத்தைக் கூறினார். உடனே வடமலையப்ப பிள்ளையும், பல பக்தர்களும் கடலில் குதித்து ஆறுமுகப் பெருமானைத் தேடினார்கள்.
முதலில் நடராஜர் சிலையையும், பிறகு ஆறுமுகப் பெருமானையும் கண்டெடுத்து ஆலயத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தனர். இன்று அந்த திருவுருவச் சிலைகளையே செந்திலாண்டவன் ஆலயத்தில் நாம் தரிசிக்கிறோம். இத்தலத்தில் குரு பகவானும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
குரு மகாதசை அல்லது குரு புக்தி குரூரமாக இருந்தால் அவர்கள் திருச்செந்தூர் வந்து ஆறுமுகனை தரிசித்து, ஸ்ரீஆதிசங்கரரின் சுப்ரமண்ய புஜங்கத்தையோ, குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவையோ ஒருமுறை பாராயணம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த ஆலயம் குரு தலமாக விளங்குவது எப்படி புராண கதையை தெரிந்து கொள்வோம். • சூரபத்மன் வேட்டை

  தட்சன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டதால் சிவநிந்தை செய்த பாவத்துக்கு ஆளாகியிருந்தார்கள் தேவர்கள். விளைவு, தேவர்களின் வலிமை குறைந்து, சூரபத்மனின் கை ஓங்கிவிட்டது. ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அவனது அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது.
 • குருவின் கலக்கம்

  தேவர்களைத் தேடிப் பிடித்து வேட்டையாடி வருகிறான். இந்திரன் இருக்கும் இடமே தெரியவில்லை. தேவர்களின் குருவான பிரகஸ்பதி கிடைத்தால், அவரையும் ஒழித்துவிடக் கங்கணம் கட்டித் திரிகிறான் அசுர வேந்தன். இதற்கெல்லாம் தீர்வு என்ன என்ற கேள்வி குருபகவானுக்குள். மனதில் ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன், கானகத்தின் வழியே சென்றுகொண்டிருந்தார் குருபகவான்.
 • தவம் செய்த குரு

  அந்தக் காடு சூரபத்மனின் தலை நகரமான வீரமகேந்திரபுரிக்கு அருகில் இருந்தது. வேறு இடங்களில் தேடினாலும் தேடுவானே தவிர, தன் எல்லையில் குரு பகவான் இருப்பார் என்ற எண்ணம் சூரனுக்கு உதிக்க வாய்ப்பே இல்லை. எனவே, இந்தக் காடு தனக்கு மிகப் பாதுகாப்பானது என்று கருதிய குரு பகவான், அங்கே ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, சிவனை மனத்தில் இருத்தி, தவத்தில் மூழ்கினார்.
 • சிவன் தாண்டவம்

  அப்போது, அவரது ஞானக்கண்ணில் திருக்கயிலையின் காட்சிகள் விரிந்தன. ஆவேசமாக எழுந்து, கோபாக்னியுடன் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார்.சிவனாரின் இந்த ருத்ர தாண்டவத்துக்குக் காரணம் இருக்கவே செய்தது. தவத்தின் பலனாக சிவனாரிடம் பல வரங்களும், இறவாத் தன்மையும் பெற்றிருந்தான் சூரபத்மன்.
 • சினம் கொண்ட சிவன்

  அதன் காரணமாக, சர்வ லோகங்களையும் ஆளும் பேறு கிடைத்தது அவனுக்கு. ஆனால் தகுதியற்றவனின் ஆட்சியில் நல்லவர்களும் ஞானிகளும் படும் பாடு சொல்லிலும் எழுத்திலும் அடங்காது அல்லவா? இங்கு தேவர்கள் மற்றும் ரிஷிகளின் பாடும் அப்படித்தான் இருந்தது. சூரபத்மனால் கொடுமையின் உச்சகட்டத்தை அனுபவிக்கத் தொடங்கினர். அதைப் பொறுக்க முடியாமல்தான் சினம் கொண்டுவிட்டார் சிவபெருமான்.
 • நெற்றிக்கண் திறந்த சிவன்

  அவரது நெற்றிக்கண் திறந்தது. அதிலிருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றின. அதைக் கண்டு பார்வதிதேவி அச்சத்துடன் விலகி நகர, அவளுடைய கால் சிலம்பு சிதைந்து, அதிலிருந்த நவரத்தின மணிகள் தெறித்துத் தரையில் விழுந்தன.
 • 9 வீரர்கள்

  இந்த நவமணிகளின் மேல் தீப்பொறிகளின் ஒளிபட்டு ஏற்பட்ட பிரதிபலிப்பில் இருந்து நவ வீரர்கள் தோன்றினார்கள். அவர்கள் வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீர மகேசன், வீர புரந்தரன், வீர ராக்ஷஸன், வீர மார்த்தாண்டன், வீர ராந்தகன், வீரதீரன்.
 • அவதரித்த ஆறுமுகன்

  அதே நேரம், சிவனாரின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையில் சேர்க்கப்பட்டன. அங்கே அவை ஒன்றிணைந்து வீரகுமாரனாக உருவெடுத்தன. குமாரனுக்கு அருளாசி வழங்கிய சிவபெருமான், ''தேவர்களே, கலங்கவேண்டாம். இதோ எனது புத்திரனான வீரகுமார் முருகன், சுப்பிரமணியன், கந்தன் என்று போற்றப்படுவான்.
 • சூரபத்மனுடன் போர்

  இவன், சூரபத்மனை அழிக்கவே தோன்றியுள்ளான். நவமணிகளின் பிரதிபலிப்பில் தோன்றிய ஒன்பது பேரும் முருகனுடன் இணைந்து போரிட்டு, சூரபத்மனை வீழ்த்துவார்கள். அதற்கான காலம் கனிந்து விட்டது என்று அருளினார் சிவன்.
 • சூரனை வெல்ல ஆலோசனை

  கார்த்திகைப் பெண்கள் 6 பேர் ஆறுமுகனை வளர்க்க நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமு மாக வளர்ந்து ஆளான முருகப்பெருமானும் நவ வீரர்களும், சூரனை வெல்வதற்குப் படை திரட்டிப் புறப்பட்டு, குருபகவான் தவமிருக்கும் இந்தக் கானகத்துக்கும் வந்து சேர்ந்துவிட்டார்கள்.
 • ஆலோசனை சொன்ன குரு

  தேவாசுர யுத்தம் மூளப்போகிறது. தேவ சேனாதிபதியாக முருகவேள் நியமிக்கப் பட்டுவிட்டார். அவருக்குத் துணையாக நவ வீரர்களும் வியூகம் வகுக்கத் தயாராக இருந்தார்கள். மந்திர ஆலோசனை நடந்தது. தேவேந்திரனின் வேண்டுகோளுக்காக தேவகுரு வியாழ பகவான், சூரபத்மனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கந்தவேளுக்கு எடுத்துக் கூறினார்.
 • குரு பகவானுக்கு அருள்

  அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட கந்தன், குருபகவானிடம் விடைபெறும் முன், 'தேவகுருவே! என்னைத் தரிசிக்கத் தாங்கள் தவமியற்றிய திருத்தலம் இது. இனி இங்கே நாம் இருவரும் சமமாக மதிக்கப்படுவோம். ஏனெனில், நாம் இருவருமே இந்த உலகை, அதில் வாழும் மக்களை ஞானத்தில் ஏற்றி உய்விக்க வந்தவர்கள்.
 • துன்பம் நீக்குவோம்

  நாம் இருவரும் எப்போதும் எதிலும் திருப்தியாக இருப்பவர்கள். கருணை தவழும் முகமும், சத்துவமான சாந்த குணமும் கொண்டவர்கள். காவி உடை அணிந்த நாம் அடியவர்களின் துன்பத்தைப் போக்குபவர்கள். அடியவர்களுக்கு அபயம் அளிக்கும் நாம் தூய திருநீறு அணிந்திருப்பவர்கள்.யுத்தம் முடிந்து, நான் இங்கு கோயில் கொள்ளும்போது, திருச் சீரலைவாய் எனும் இந்தப் புண்ணியப்பதியும் தங்களின் பெயரால் குரு ஸ்தலமாகவே விளங்கும்'' என்று வரம் அளித்துச் சென்றார்.
 • அருள் புரியும் குரு பகவான்

  அதன்படி, குருபகவான் அங்கேயே தங்கினார். அதுமட்டுமின்றி, கந்தன் தந்த வரப்பயனால் 6 மைந்தர்களையும், ஒரு மகளையும் பெற்று, திருச்செந்தூரில் குரு பகவானாக, புத்திரப்பேறு அருளும் தேவனாக, ஞானம் அருளும் ஞான குருவாக அருள்பாலிக்கிறார். எனவேதான் குரு பரிகார தலமாக திருச்செந்தூரை பரிந்துரை செய்கின்றனர் ஜோதிடர்கள்.


 • 0 comments:

  Post a Comment

  எங்களிடம் நாடார் , அசைவப்பிள்ளை , ஆசாரியார் , ஐய்யர் , யாதவர் , அகமுடையார் , கவராநாயுடுடு , கள்ளர் , மறவர் , செட்டியார் ,கிறிஸ்தவர், முதலியார் சைவப்பிள்ளை , இல்லத்துப்பிள்ளைமார்ப்பிள்ளைமார், ரெட்டியார் , கவுண்டர் , முஸ்லீம் , கம்மவார்நாயுடு , பலிஜாநாயுடு , அருந்ததியார் , நாயர் ,மூப்பனார் , மருத்துவர்வர் , வீரசைவம் , வண்ணார் , வன்னியர், செளராஷ்டிரா , நாயக்கர் , வேளார் , உடையார் , ஆதிதிராவிடர் , PR, PL, முத்தரையர் திருமணத்தகவல்கள் எராளமாக உள்ளன.

  இலவச பதிவு - http://www.tamilsubavivaham.com/register